நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளதாவது, கோடை உழவு விவசாயிகள் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால், கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்பகுதிக்கு செல்லும்போது, நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். மேல் மண்ணை உழவு செய்து புழுதிப்படலம் அமைத்து விட்டால் விண்வெளிக்கும், வேர் சூழ் மண்டலத்துக்கும் தொடர்பு அறுந்து விடும். இதனால் நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாக விடாமல் புழுதிப்படலம் தடுத்து விடும். கோடை மழையின் ஈரத்தை பயன்படுத்தி, நிலத்தை நன்கு உழவு செய்வதால், மேல் மண் துகள்களாகி நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதனால், நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும்.
வயலிலுள்ள கோரை போன்ற களைகள், மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு, சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில் நுட்பமாகும். நிலத்தின் அடியில் உள்ள கூட்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது. மிக முக்கியமாக, மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழு கட்டுப்படுத்தப்படுகிறது. பூச்சி நோய் தாக்குதல் பெருமளவு குறையும். வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில், கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயிகள் கோடை உழவு செய்து பயனடைய வேண்டுமாறு நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *