சென்னை-சில தினங்களாக காற்றாலைகளில் குறைவான மின்சாரம் கிடைப்பதால், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு திடீரென நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், 8,618 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துஉள்ளன.அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. மே மாதம் துவங்கிய காற்றாலை சீசன் வரும் செப்., வரை இருக்கிறது.நடப்பு சீசன் துவங்கியதில் இருந்து, காற்று நன்கு வீசியதால், காற்றாலை மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக, 8 கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.

இம்மாதம், 9ம் தேதி எப்போதும் இல்லாத அளவாக, 12 கோடி யூனிட் கொள்முதல் செய்து, மின் வாரியம் சாதனை படைத்தது.மின் தேவையை பூர்த்தி செய்வதில், காற்றாலை மின்சாரம் அதிகம் பயன்படுத்தப் பட்டது.மேலும், நிலக்கரியை மிச்சப்படுத்த, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், சில தினங்களாக காற்றாலைகளில் இருந்து, 1 கோடி யூனிட்களுக்கு குறைவாக மின்சாரம் கிடைக்கிறது. தற்போது, வெயில் சுட்டெரிப்பதால் மின் தேவை வழக்கமான, 15 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது.இதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய அனல், நீர் மின் நிலையங்களில் மின்உற்பத்தியை மின் வாரியம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *