ஈரோடு மாவட்டம் 121 வகை பறவைகள் வசித்து வரும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற வகையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று உள்ளது.

பெரிய குளம் ஏரி

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம், ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு தலங்களில் முக்கியமானதாக உள்ளது. வடமுகம் வெள்ளோடு கிராமத்தில் உள்ள பெரிய குளம் ஏரி 1980-ம் ஆண்டு வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இங்கு சமூக நலக்காடுகள் கோட்டம் மூலமாக கருவேல மரங்கள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டன.

அத்துடன் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கிய பெரிய குளம் ஏரியில் கட்லா, ரோகு, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் வளர்க்கப்பட்டன. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் வெள்ளோடு பெரியகுளம் ஏரியை நோக்கி பறந்து வந்தன. இங்கு ஏற்கனவே கருவேல மரங்கள் வளர்ந்து இருந்ததால் பறவைகள் இங்கேயே வசித்து கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய தொடங்கின.

பறவைகள் சரணாலயம்

சாம்பல்நாரை, ராக்கொக்கு, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்ட்டி வாயன், புள்ளிமூக்கு வாத்து, தட்டை வாயன், வெண்புருவ வாத்து, புள்ளி அலகு கூழைக்கடா போன்ற அரியவகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வசிக்க சிறந்த சீதோஷ்ண நிலையை கொண்ட பகுதியாக பெரிய குளம் ஏரி மாறியது. எனவே பறவைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாக இது உருமாறியது.

இதனால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே வெள்ளோடு பெரிய குளம் ஏரி கடந்த 2000-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் சிறப்பு பெற்ற பகுதியாக விளங்கி வருகிறது.

121 வகை பறவைகள்

இந்த பறவைகள் சரணாலயம் ஈரோடு மாவட்ட வனக்கோட்ட மாவட்ட வன அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை இங்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன. ஏரி தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்ய கூடுதலாக மரங்கள் நடவு செய்யப்பட்டன. பார்வையாளர் மாடம், பொழுதுபோக்கு வசதி என்று பல பணிகள் செய்யப்பட்டன. இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அதே நேரம் மேலும் பல வெளிநாட்டு பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை நோக்கி படை எடுக்கவும் காரணமாக அமைந்தது.

எனவே சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதைத்தொடந்து கடந்த பிப்ரவரி மாதம் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் இணைந்து நடத்திய இந்த பணியின் முடிவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் 121 வகை (இன) பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. கணக்கீடு பணி முடிந்த போது அங்கு 23 ஆயிரத்து 427 பறவைகள் இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.

சர்வதேச அங்கீகாரம்

இங்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வசிப்பதால், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ள பெரிய குளம் ஏரியை பாதுகாக்கும் வகையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற அங்கீகாரத்தை பெறும் ராம்சர் அமைப்புக்கு அரசு சார்பில் முன்மொழியப்பட்டது. ராம்சர் என்பது ஈரான் நாட்டில் உள்ள நகரம். 1971-ம் ஆண்டு ஈரநிலங்கள் பாதுகாப்பு அல்லது சதுப்பு நிலங்கள் பாதுகாப்புக்கான சாசகம் இங்கு கையெழுத்தானது. எனவே இது ராம்சர் சாசன அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளோடு பறவைகள் சரணாயலம் குறித்த அறிக்கை இந்த ராம்சர் அமைப்பால் ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வெள்ளோடு பறவைகள் சரணாலயம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற ராம்சர் அங்கீகாரத்தை பெற்று உள்ளது. இதனால் இந்த பறவைகள் சரணாலயம் மேலும் அதிக அளவில் பறைவைகளின் வாழ்விடமாக மாறும் சாத்தியம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *