அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரூ.1600 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு-பெருந்துறை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஈரோடு என்பது தமிழர்களாகிய நமது உயிரோடு கலந்திருக்கக்கூடிய ஊர். இதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அப்படிப்பட்ட ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறேன். பெருந்துறை என்பது பல்வேறு வரலாற்று பெருமை கொண்ட ஊர். பெருந்துறை அருகே உள்ள திங்களூரில் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் தமிழ்ச்சங்கம் இருந்தாக ஒரு செப்பேடு கூறுகிறது. சேரனை சோழன் வென்ற இடம் இந்த பெருந்துறை. சிறை வைக்கப்பட்ட சேரனை மீட்க புலவர் பாடியதுதான் களவழி நாற்பது என்ற நற்றமிழ் நூல்.

யானைப்போர்களை நினைவூட்டும் கோட்டை, கோவில்கள் இருக்கக்கூடிய பகுதி. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த பகுதியில் அரசு விழா மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாக இதே ஈரோட்டில் இந்த இடத்தில் நடந்த மண்டல மாநாடு எனக்கு நினைவுக்கு வருகிறது.

திட்டப்பணிகள்

கடந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்துக்கு செய்து தரப்பட்டு உள்ளது.

பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் 761 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 20 ஆண்டு கோரிக்கையான ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 2 பஸ் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கி இருக்கிறது. பர்கூர் ஊராட்சி மலைப்பகுதி கிராமங்களில் சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் உருவாக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட, ரூ.1600 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. பெருந்துறை பகுதிக்கு ரூ.765 கோடி மதிப்பில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் கிடந்தது. அதனையும் நாம் செயல்படுத்த இருக்கிறோம்.

முப்பெரும்விழா

ஈரோடு மாவட்டத்தில் 1,761 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.184 கோடியாகும். 135 முடிவுற்ற பணிகளை நான் இந்த விழாவில் தொடங்கி வைத்து இருக்கிறேன். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.262 கோடியாகும். மேலும், 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு ரூ.167 கோடியே 51 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த மூன்றும் இணைந்த முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் ஊராட்சியில் உள்ள மடம், கல்வாரை, பெஜலட்டி, எப்பத்தாபாளையம், தேவர்மலை கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக நபார்டு-கனிமம் மற்றும் சுரங்கங்கள் திட்டங்களின் கீழ் தொலைதூரக்கல்வி மற்றும் தொலைதூர மருத்துவ சேவையினை இணையதளம் வழியாக வழங்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொப்பரை

மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தொழிற்குழு உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக ஆற்றல் ஈரோடு என்ற பிரத்தியேக செயலி (ஆப்) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த விற்பனை இணையதளத்தின் செயல்பாடு இப்போது தொடங்கி வைக்கப்பட்டது.

நான் பொள்ளாச்சி போகும்போது அங்கிருந்த விவசாயிகள் என்னிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் குறித்து ஒரு கோரிக்கை வைத்தார்கள். அதைப்பற்றி நான் வேளாண் துறையில் கேட்டபோது கொப்பரை கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்றும், கோவை, திருப்பூர், தஞ்சை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் 6 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கொப்பரை கொள்முதல் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றும் எனக்கு தெரிவித்தனர். இங்கு நான் வந்ததும், மாவட்ட மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டு அதன் அடிப்படையில் சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

சாலை-குளிர்பதன கிடங்கு

ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை தற்போது நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் தொடங்கி ஈரோடு -பெருந்துறை ரோடுவரை 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோட்டின் தொடர்ச்சியாக ஈரோடு -திங்களூர் ரோட்டை (நசியனூர் ரோடு) கடந்து சத்தி ரோடு வரை நீட்டித்து அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.60 லட்சம் செலவில் தயாரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் வேளாண்மை உற்பத்தியை பெருக்கி, உழவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் ரூ.16 கோடியே 82 லட்சம் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் ஈரோட்டில் ரூ.2 கோடி செலவில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். நல்லாம்பட்டி, தாளவாடியிலும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். மஞ்சள் உற்பத்தி செய்யும் உழவர்களின் நலனுக்காக ரூ.10 கோடியில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும்.

முதன்மை மாவட்டம்

தாளவாடியில் உள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் மற்றும் புதிய எக்ஸ்-ரே கருவி அமைக்கப்படும். மேலும், இந்த கூட்டத்தின் மூலம் உங்களுக்கு நான் அளிக்கும் உறுதி என்ன என்றால், ஈரோடு மாவட்டத்தை எல்லாவற்றிலும் முதன்மை மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வோம் என்பதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *