ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

பூங்கா

ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்டது குமலன்குட்டை பகுதி. இங்கு கணபதிநகர், குமரேசன் நகர், டெலிபோன் நகர் பகுதிகளை ஒட்டி ஈரோடு மாநகராட்சி பொழுதுபோக்கு பொது பூங்கா ஒன்று உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.47 லட்சம் செலவில் இந்த பூங்கா கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இங்கு பெரியவர்கள் நடைப்பயிற்சி செல்ல வசதியும், சிறுவர்-சிறுமிகள் விளையாட உபகரணங்களும் உள்ளன.

அதிகாரிகளை முற்றுகை

இந்தநிலையில் பூங்காவின் சுவர் இடித்து சேதப்படுத்தப்பட்டு சாலை அமைக்க மண் கொட்டப்பட்டு இருக்கிறது. பூங்கா விளையாட்டு உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் நேற்று திடீரென்று பூங்கா அருகே கூடினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், இளநிலை பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதிகாரிகளின் காரை பொதுமக்கள் தடுத்து முற்றுகையிட்டனர். ஒருவர் காரின் முன்பு தரையில் உட்கார்ந்து மறியல் செய்தார்.

கண்டனம்

பின்னர் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தனிநபர் ஒருவரின் வீட்டுக்கு செல்ல பூங்காவை இடிக்கலாமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் கூறும்போது, ‘பூங்காவை இடித்து பாதை அமைக்க யாருக்கும் அனுமதி இல்லை. இப்படி வழித்தடம் அமைக்க யாரும் அனுமதியும் கேட்கவில்லை. இதுதொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்கள்.

இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, ‘பொது பொழுதுபோக்கு பூங்காவை இடித்து கவுன்சிலர் ஒருவர் அவரதுவீட்டுக்கு சாலை அமைக்கிறார். வார்டு மக்களுக்கு தேவையான சாக்கடை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்ற கவுன்சிலரை தேர்ந்து எடுக்கிறோம். எங்கள் தேவைகளுக்காக அவரிடம் முறையிட செல்லலாம். ஆனால், கவுன்சிலரே அவரது சுயலாபத்துக்காக பொது சொத்தை சேதப்படுத்தினால் யாரிடம் சென்று முறையிடுவது. பொது சொத்தை சேதப்படுத்திய அவரை கண்டித்து போராட்டம் நடைபெறும்’ என்று அவர்கள் கூறினார்கள்.

போலீசில் புகார்

இதற்கிடையே பூங்காவை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘பூங்கா சேதப்படுத்தப்பட்ட விவரம், பொதுமக்கள் போராட்டத்துக்கு பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது. உடனடியாக அங்கு சென்று பார்வையிட்டு, அதை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கூறப்பட்டு உள்ளது. அங்குள்ள பொதுமக்கள் கவுன்சிலர் மீது புகார் கூறுகிறார்கள். ஆனால் விசாரணைக்கு பிறகுதான் உண்மை தெரியவரும்’ என்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *