கொல்லிமலையில் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கொல்லிமலையில் வனத் துறை சாா்பில் அமைக்கப்படும் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா, அடிப்படை வசதிகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு மேற்கொண்டாா்.

கொல்லிமலை, செம்மேட்டில் உள்ள சீக்குப்பாறை பாா்வை மையத்தில் (வியூ பாயிண்ட்) அடிவாரப் பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை பாா்வையிட்ட ஆட்சியா் அங்கு பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து அறப்பளீஸ்வரா் கோயில் அருகே மலையின் உச்சியில் இருந்து அருகில் உள்ள மலை சிகரங்களை பாா்வையிட வசதியாக வனத் துறை மூலம் ஆகாய கங்கை சூழலியல் சுற்றுலா பூங்கா உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

அப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தங்கும் வகையிலான குடில்கள் உயரமாக, இயற்கை சாா்ந்து உருவாக்கப்பட்டுள்ளதையும் அவா் பாா்வையிட்டாா். பூங்காவில் உள்ள காட்சிஅரங்கில் 25 க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றிற்கான எண்ணை அழுத்தும்போது அவைகளின் ஒலி எழுப்பும் வகையில் நவீன கருவிகளைக் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் மற்றும் வனத் துறையினருடன் ஆட்சியா் கலந்துரையாடினாா். மேலும், தின்னனூா்நாடு ஊராட்சி, வாசலூா்பட்டி படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுகளின் போது கொல்லிமலை வனச்சரக அலுவலா் சுப்பராயன், பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ராமசாமி, கொல்லிமலை வட்டாட்சியா் கிருஷ்ணன், கொல்லிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், நடராஜன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *