சென்னை: பிரதமர் மோடியை ஓ பன்னீர்செல்வம் இன்று தனியாக சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியால் மோடியை தனியாக சந்திக்க முடியாமல் போய் உள்ளது. அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு இது கொஞ்சம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக டெல்லிக்கு கடந்த வாரம் சென்று இருந்தார். குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.

அதோடு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பதவி ஏற்பு விழாவிலும் எடப்பாடி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

இது போக பிரதமர் மோடி, அமித் ஷா இருவரையும் எடப்பாடி சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் 4 நாட்கள் டெல்லியில் இருந்தும் எடப்பாடி பழனிசாமியால் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. அமித் ஷாவையும் சந்திக்க முடியவில்லை. இரண்டு பேருமே அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்செட் ஆன எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு திரும்பினார். 5 நாட்கள் அங்கே இருக்க வேண்டியவர் 4 நாட்களில் திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி சந்திக்க முயல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சென்னையில் மோடி இருப்பதாக பயண திட்டம் போடப்பட்டது. இதனால் மோடியை இடைப்பட்ட நேரத்தில் எடப்பாடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மோடி நேற்று 8 மணிக்கு பின் ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். இந்த நேரத்தில் அவரை சந்திக்க எடப்பாடி முயற்சி எடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் மோடி யாருக்கும் நேரம் கொடுக்கவில்லை. மாறாக பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். பாஜகவின் மூன்றாம் கட்ட நிர்வாகிகளை கூட சந்தித்து பேசிய மோடி நேற்று என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுகவின் முக்கிய தலைவர் எடப்பாடிக்கு நேரம் கொடுக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள். நேற்று விமான நிலையத்தில் எடப்பாடியை மோடி சந்தித்தார். அவரின் கைகளை குலுக்கினார். ஆனால் அவரிடம் தனியாக பேசவில்லை. இது 2 நொடி சந்திப்பு மட்டுமே;. மற்றபடி தனியாக நடைபெற்ற சந்திப்பு.கிடையாது

ஆனால் இன்று ஓ பன்னீர்செல்வத்தை இன்று விமான நிலையத்தில் மோடி தனியாக சந்தித்து உள்ளார். ஓ பன்னீர்செல்வத்தின் உடல்நிலை குறித்தும் விசாரித்து உள்ளார். 5-10 நிமிடங்கள் ஓ பன்னீர்செல்வத்திடம் மோடி பேசியதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த 10 நிமிடம் எடப்பாடிக்கு ஏன் கிடைக்கவில்லை. எடப்பாடியை ஏன் மோடி சந்திக்க தொடர்ந்து மறுக்கிறார் என்ற விவாதத்தை இது ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பல விதமான கேள்விகளை எழுப்பி உள்ளது.

கேள்வி 1 – எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதற்கு இன்னும் மோடி வாழ்த்து சொல்லவில்லை. அப்படி என்றால் மோடி இதை விரும்பவில்லையா?

கேள்வி 2- ஓ பன்னீர்செல்வத்தை தனியாக பார்த்த மோடி, எடப்பாடியை பார்க்கவில்லை. அப்படி என்றால் டெல்லி பாஜக எடப்பாடிக்கு எதிராக இருக்கிறதா?

கேள்வி 3 – திடீரென எடப்பாடிக்கு நெருக்கமான மாஜி அமைச்சர்கள் காமராஜ், வேலுமணி, சி விஜயபாஸ்கர் ஆகியரோ ரெய்டில், விசாரணையிலும் சிக்கி இருப்பது ஏன்? டெல்லி பாஜக எடப்பாடி டீம் மீது கோபத்தில் இருக்கிறதா?

கேள்வி 4 – சமீபத்தில் ஜிஎஸ்டி சதவிகித உயர்வை எடப்பாடி விமர்சனம் செய்து, அதை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார். இதன் காரணமாக டெல்லி பாஜகவும், மோடியும் எடப்பாடி மீது கோபத்தில் இருக்கிறார்களா?

கேள்வி 5 – கடந்த சில நாட்களாகவே காங்கிரசுடன் எடப்பாடி நெருக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நெருக்கம் குறித்த செய்திகளால் எடப்பாடி டீம் மீது மோடி அதிருப்தியில் இருக்கிறாரா? ஆகிய கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த அரசியல் சூழ்நிலையை எடப்பாடி எப்படி சமாளிப்பர்.. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் எப்படி நீடிப்பார் என்பது போக போகத்தான் தெரியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *