கோவை:

கோவை பச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. ஆவின் மார்க்கெட்டிங் அலுவலகம் ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆவின் தயாரிப்புகளான நெய், இனிப்புகள் ஆகியவை விற்பனை செய்ததில் ரூ.60 லட்சம் வரையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. குறிப்பாக, கோவை ஆவின் நிறுவனத்தின் ஊழல், முறைகேடு, விற்பனை சரிவு குறித்து ஊழியர்கள், பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் பல்வேறு புகார்களை ஆவின் கமி‌ஷனருக்கு தெரிவித்தனர். மேலும், விற்பனை பிரிவு மேலாளர் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆவின் கமி‌ஷனர் டாக்டர் சுப்பையன் உத்தரவின் பேரில், சென்னையில் இருந்து 4 பேர் கொண்ட ஆவின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் உள்ள மார்க்கெட்டிங் அலுவலகத்திற்கு சென்றனர்.

பின்னர், அங்கு இருந்த ஆவணங்கள், இருப்பில் உள்ள பொருட்கள், விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் பச்சாபாளையம் நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கும் ஆய்வு நடத்தினர். காலை முதல் இரவு வரை ஆர்.எஸ்.புரம் மற்றும் பச்சாபாளையம் ஆவினில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், விற்பனை பிரிவு மேலாளர் சங்கீதா, மண்டல விற்பனை அலுவலர் சுப்பிரமணியம், ஜீவிதா, சாமிநாதன் ஆகியோரிடம் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் விசாரணையில், ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்து அதற்கான பணத்தை கட்டவில்லை எனவும், இருப்பில் இருந்த பொருட்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *