சென்னை:

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் சுற்று போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பட்டு சட்டை, வேட்டியுடன் கலந்துகொண்டனர். அதேபோல் தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர்.

இந்த தொடக்க விழாவில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பின்னர் கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பெருமை, கல்லணை, கோயில்கள், கவிஞர்கள், சங்க இலக்கியம், சோழர்கள் என முப்பரிமானத்தில் செய்து காட்டப்பட்ட நிகழ்த்துக்கலை அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதேபோல் லிடியனின் இசை நிகழ்ச்சிகளும் அனைவரையும் வியக்க வைத்தது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை கண்டு எதிர்க்கட்சிகளும் பாராட்டும் வகையில் தமிழக அரசு செய்து காட்டியுள்ளது. அதேபோல் சர்வதேச போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு இணையாக நடத்தப்பட்டதாகவும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த தொடக்க விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குழுவினர் முடித்து காட்டியுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா குறித்து நடிகரும், திமுக எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு பின்னணியில் உழைத்த கிரியேட்டிவ் குழுவினருக்கு நன்றி. இயக்குநர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் விக்னேஷ் சிவன், அதிதி ஷங்கர் மற்றும் குழுவினருக்கு பாராட்டுகள். இதனைவிடவும் நிறைவு விழா இன்னும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் நிறைவு விழாவுக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இப்போதே எகிறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *