கோட்டை வடிவ நீர்த்தேக்கம்

ஈரோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ஊராட்சிக்கோட்டை அருகே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக காவிரியில் இருந்து நீரேற்றம் செய்து ஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய் மூலம் வழங்க திட்டமிட்டு கட்டப்பட்டதுதான், வ.உ.சி.பூங்கா கோட்டை வடிவ குடிநீர் தொட்டி. ஈரோடு மக்களுக்கு குடிநீர் வினியோகத்துக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம் இந்தியாவிலேயே குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான முன்னோடி திட்டம் என்பது சிறப்புக்கு உரிய செய்தியாகும்.

ஈரோடு நகராட்சி 100 ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி பெற்ற நகராக இருந்தது. ஜவுளி மற்றும் மஞ்சள் உற்பத்தியில் சிறந்து விளங்கிய ஈரோடு நகர் மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்க ஈரோடு நகர்மன்ற தீர்மானத்தின் படி குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. வைராபாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரை நீரேற்றம் செய்து வினியோகிக்கும் திட்டத்தில் தொட்டி கட்டுவதற்காக தேர்ந்து எடுக்கப்பட்ட இடம் வ.உ.சி.பூங்கா.

டி.சீனிவாச முதலியார்

இந்த பூங்காவை ஈரோடு நகரில் உருவாக்கியவர் டி.சீனிவாச முதலியார். இவர் ஈரோடு நகர்மன்ற தலைவராக பதவி வகித்தார். காந்திய பக்தரான இவர், ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்தபோது ஈரோடு வாட்டர் ஒர்க்ஸ் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அவர்தான் பூங்கா பகுதியில் அப்போது மேடான பேய்ச்சிப்பாறை பகுதியை தண்ணீர் தொட்டி அதாவது நீர்த்தேக்கம் அமைக்கும் பகுதிக்கு தேர்வு செய்தார்.

குடிநீர் தொட்டி அமைக்க பல்வேறு தடைகள் இருந்தபோதும் அவற்றை எல்லாம் திறம்பட தகர்த்து செங்கோட்டை வடிவில் அழகிய நீர்த்தேக்கம் கட்டும் பணிகளை தொடங்கினார். இந்த பணிகள் 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்த பி.எஸ்.சிவசாமி அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகள் பணி நடந்தது.

தந்தை பெரியார்

இந்த காலக்கட்டத்தில் நடந்த தேர்தலில் தந்தை பெரியார் ஈரோடு நகர்மன்ற தலைவராக பதவி ஏற்றார். சீனிவாச முதலியார் தொடங்கிய பணியை முடித்து வைத்தவர் தந்தை பெரியார். அவருடைய பதவிக்காலத்தில் அதாவது 26-5-1919 அன்று குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது. தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி) தலைமையில் நடந்த விழாவில் புனித ஜார்ஜ் கோட்டையில் அதிகாரியாக இருந்த பி.ராஜகோபாலச்சாரியார் திறந்து வைத்தார். கடந்த 2019-ம் ஆண்டு இந்த தொட்டி நூற்றாண்டு கொண்டாடியது. தற்போது 103 ஆண்டுகள் கடந்து 104-வது ஆண்டிலும் தொடர்ந்து செயல்படும் நீர்த்தேக்கமாக இது விளங்குகிறது. சுமார் 5 லட்சம் லிட்டர் அளவுக்கு இங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் முதன் முதலாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இந்த சிறப்பான தொட்டியை கட்டிய அப்போதைய நகர்மன்ற தலைவர்கள் டி.சீனிவாச முதலியார், தந்தை பெரியார் ஆகியோரை நன்றியுடன் நினைத்துப்பார்க்க வேண்டும்.

104 ஆண்டுகள்

தற்போது கட்டப்படும் குடிநீர் தொட்டிகள் மட்டுமின்றி, அரசு கட்டிடங்கள் சில ஆண்டுகளிலேயே பழுதடைந்து போவதும், எந்த பயனும் இன்றி வீணாகிப்போவதும் அன்றாடம் நாம் காணும் காட்சிகள். இந்த நிலையில் 104 ஆண்டுகளாக இடைவிடாது நீர்த்தேக்கம் செய்து தொடர்ந்து இயங்கி வரும் ஈரோடு குடிநீர் தொட்டி கோட்டை வடிவில் கம்பீரமாக அமைந்து உள்ளது.

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் பல நூறு கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இன்னும் முழுமையாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் திணறும் நிலை இருக்கிறது. ஆனால் தொழில் நுட்பங்கள் அதிகம் இல்லாத காலத்திலேயே குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை தொடங்கியதுடன், இன்றுவரை தொய்வு இல்லாமல் சிறப்பாக குடிநீர் வினியோகம் செய்யும் திட்டமாக இது உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *