ஈரோடு
ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 50 கோடி ரூபாயிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் பிரதான தொழிலாக ஜவுளி தொழில் விளங்கி வருகிறது. இதற்கு அடிப்படை தேவையான நூல் விலை கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து 30 முதல் 40 சதவீதம் உயர்ந்து வருவதால் , ஜவுளி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதற்கு ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலுக்கு நாடு முழுவதும் ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று ஒருநாள் ஜவுளி கடைகள் அடைத்தும் உற்பத்தியை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பன்னீர்செல்வம் பார்க், மணிகூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி போன்ற இடங்களில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி விற்பனை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதே போல் சித்தோடு, சென்னிமலை உட்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சுமார் 30 ஆயிரம் விசைத்தறி கூடங்கள், சாய சலவை ஆலைகள் உள்ளிட்டவையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 50 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தி மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *