கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளி மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.   போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிய நிலையில், சாலைமறியல் போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள், 50க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். மேலும் சென்னை – சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்ட கும்பல், போலீசார் தடுப்புகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

அங்கு கூடியிருந்த காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர். போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதி பெரும் பதற்றமாக காணப்படுகிறது. இதில் காயமடந்த காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிலைமைக் கட்டுபடுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும், தொடர்ந்து போராட்டக்காரர்க்ள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் வெடித்துள்ளது. பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்கள் அடித்து நொறுக்கியுள்ளன. மேலும் டிராக்டர் கொண்டும் தீ வைத்தும் பள்ளி வாகனங்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னை சேலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்து வருகின்றனர். போலீசாரின் தடுப்புகளை உடைத்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி, போராட்டத்தை நடத்த வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது. கலவரம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்றப்பின்பு நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்காரர்கள் அமைதிக்காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறையின் வீடியோ பதிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். 

தொடர்ந்து, மாணவி இறப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும். வன்முறைகளை ஒடுக்க கூடுதல் காவலர்களை கேட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வன்முறை தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். உளவுத்துறை ஐஜி ஆசையம்மாள்,ஐஜி ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் டிஜிபி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

இதற்கிடையே மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்து காயங்களும் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாகமூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதியில் காயம், எலும்பு முறிவு, ரத்தச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஆடைகளில் ரத்தக்கரை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல காயங்கள் காரணமாக அதிக ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியால் மாணவி இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளுறுப்புகளின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னர் தான், மாணவி எப்படி இறந்தார்? என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என்று கூறப்படுகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *