43 மணி நேரம்! 2 ஹெலிகாப்டர் வந்தும் பயனில்லை! கேரளாவில் மலைமுகட்டில் சிக்கி உள்ள இளைஞர் -பரபரப்பு வீடியோ

பாலக்காடு மழப்புழா மலையில் டிரெக்கிங் செல்லும் போது மாணவர் ஒருவர் மலைமுகட்டில் சிக்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 43 மணி நேரமாக அந்த மாணவர் மலைமுகட்டில் சிக்கி போராடிக்கொண்டு இருக்கிறார். கேரளா மாநிலம் மலப்புழா பகுதியில் உள்ள சேராட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர் பாபு. இவர் அங்கு இருக்கும் குறம்பாச்சி மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய சென்று இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் தனது மூன்று நண்பர்களுடன் அவர் அங்கு மலையேற்றம் செய்து இருக்கிறார். ஆனால் மலையில் ஏறிவிட்டு இறங்கும் போது பாபு தவறி கீழே விழுந்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக மலைக்கு கீழே விழாமல் முகடு ஒன்றில் குதித்து தப்பித்து உள்ளார். அதாவது மலைக்கு நடுவே குகை போல இருக்கும் அமைப்பு ஆகும் இது. ஆள் செல்ல முடியாத இந்த இடத்தில் பாபு தவறி கீழே விழுந்துள்ளார். கடந்த பிப்ரவரி 7ம் தேதி உள்ளே விழுந்தவர் கடந்த 43 மணி நேரமாக அந்த மலை யுகத்தில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறார். முதலில் அவரை மீட்க அவரின் நண்பர்கள் முயன்று உள்ளனர்.

அங்கு இருந்த குச்சி, கம்புகள், கயிறுகளை வைத்து அவரை மீட்க முயன்று உள்ளனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கீழே வந்த நண்பர்கள் உள்ளூர் ஆட்களிடமும், தீயணைப்பு துறையிடமும் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 7ம் தேதி இரவு 12 மணிக்கு தீயணைப்பு படையினர் அங்கு வந்து கேம்ப் அமைத்தனர். அவரை மீட்கும் பணி இரவில் இருள் காரணமாக செய்யப்படவில்லை. மறுநாள் தொடங்கப்பட்ட மீட்பு பணி இப்போது வரை நடந்து கொண்டு இருக்கிறது.

பாபு இருக்கும் முகட்டு பகுதி யாராலும் எட்ட முடியாத இடத்தில் உள்ளது. கயிறு மூலம் அவரை தொட முடியவில்லை. இதையடுத்து அவரை காப்பாற்ற கொச்சி கடலோர காவல் படை ஹெலிகாப்டர் களமிறங்கியது. ஆனால் ஹெலிகாப்டர் வந்தும் கூட அவரை காப்பாற்ற முடியவில்லை. மலை முகடு கரடு முரடாக இருப்பதால் ஹெலிகாப்டர் பாபு இருக்கும் பகுதிக்கு அருகில் செல்ல முடியவில்லை.

இதையடுத்து தற்போது பாலக்காடு ஆட்சியர் கடற்படையின் உதவியை நாடினார். கடற்படை பயன்படுத்தும் நவீன ஹெலிகாப்டர்களை வைத்து அவரை மீட்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவர்களின் ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக களமிறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்து கயிறை வீசி அதை பிடித்து மேலே வரும்படி பாபுவிற்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார். ஆனால் மலை முகட்டில் இருந்து கையை பிடிக்க முடியாத காரணத்தால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது.

இரண்டு ஹெலிகாப்டர் வந்தும் அவரை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மீட்பு பணியில் களமிறங்கி உள்ளது. கடந்த 43 மணி நேரமாக பாபு தண்ணீர் குடிக்கவில்லை. இரவு முழுக்க அங்கேயே தூங்காமல் இருந்துள்ளார். எதுவும் சாப்பிடவில்லை. தண்ணீர், தண்ணீர் என்று மலை முகத்தில் அமர்ந்து கொண்டு பாபு கத்தும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது

இதனால் உடல் ரீதியாக அவர் மிகவும் நலிவுற்று காணப்படுகிறார். டிரோன் மூலமும் பாபுவிற்கு உணவு கொடுக்க முடியவில்லை. அவர் மிகவும் சிக்கலான இடத்தில் இருக்கிறார் என்பதால் அவரை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் அதிகாரிகள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மலைமுகட்டில் சிக்கி பாபு போராடி வரும் வீடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு
மலைப் பகுதியில் சிக்கிய பாபு என்ற 23 வயது இளைஞர் 45 மணி நேரத்திற்கு பின் இந்திய இராணுவத்தால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *