உழவர்களின் நலன், உணவு பாதுகாப்பை வலியுறுத்தும் தேசிய விவசாயிகள் தினம் (Indian Farmer’s Day) இன்று (டிசம்பர் 23).

பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போதே உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வையும் அறிமுகப்படுத்தினார். இதைப் போன்றே அவர் ஆட்சியின் போது உழவர்களின் நலன்களுக்காக சில முக்கிய திட்டங்களை கொண்டுவந்தார்.

தேசிய விவசாயிகள் தினம் (Indian Farmer’s Day) உழவர்களின் நலனுக்காகவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங் அவர்களின் பிறந்த நாளே தேசிய உழவர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் தேசிய உழவர் நாளன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். உண்மைதான். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படி விவசாயத்தில் சாதனைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்னும் விவசாயம் ஆட்சியாளர்களுக்கு முதன்மை துறையாக இல்லாதிருப்பது வருத்தத்தை அளித்து வருகிறது.

சவுத்ரி சரண் சிங், ஜமீன்தாரி முறை ஒழிப்பு’, ‘கூட்டுறவு பண்ணை முறை’, ‘இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்’, ‘வேலை செய்பவர்களுக்கு நிலம்’ உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது. தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக, அவரது பிறந்தநாளான டிசம்பர் 23-ம் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிரியேட் அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேளாண் விற்பனைத் துறை அதிகாரி பொன்னம்பலம் கூறுகையில், “விவசாயத் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய மாதிரி சர்வேயில், 8 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை, 40 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற இருப்பதாகச் சொல்கிறது. விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. தமிழகத்தில், 2000-2010 வரையுள்ள புள்ளி விவரங்களின்படி, ஏறக்குறைய 2 லட்சம் ஹெக்டேர் நெல் பயிரிடும் பரப்பு குறைந்துள்ளது. விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் ஆவதைத் தடுக்க வேண்டும். இதற்கென தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு, உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். விளைவிக்கும் பொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் காலம் வரவேண்டும்” என்றார். நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தட்டிமேடு ஜெயராமன் கூறுகையில், “தமிழகத்தில் இருந்த 40,000 நீர் ஆதாரங்களில் 75 சதவிகித குளங்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக காணாமல் போய்விட்டன. விவசாயத்தை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *