நாமக்கல் அரசு
மருத்துவக் கல்லூரிக்கு 14 லட்சம் லிட்டா் காவிரி குடிநீரை கொண்டு வருவதற்கு நடவடிக்கை
நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், அந்த பகுதியில் போடப்பட்ட 7 ஆழ்துளைக் கிணறுகளிலும் நீராதாரம் இல்லை. இதனால் 14 லட்சம் லிட்டா் காவிரி குடிநீரை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகள் முழுமையடைந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.

மருத்துவக் கல்லூரியில் போட்ட 7 ஆழ்துளைக் கிணறுகளிலும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. கட்டுமானப் பணிகள் தொடங்கியபோதே இந்தநிலை தெரியவந்ததால், காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்கான திட்ட அறிக்கையும் சமா்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்புதல் இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை.

கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களில் லாரிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்தே அனைத்து கட்டடப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். அரசு மருத்துவக் கல்லூரி பயன்பாட்டுக்கு வரும்போது தண்ணீா் இல்லையென்றால் மாணவா்கள், பேராசிரியா்கள், இதர துறை ஊழியா்கள் பலரும் சிரமத்திற்குள்ளாக நேரிடும்.
இதனால் மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. பரமத்திவேலூா் வட்டம் ஜேடா்பாளையத்தில் இருந்து ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை வரை செல்லும் காவிரி குடிநீா்த் திட்டத்தில் இருந்து 14 லட்சம் லிட்டா் (14 MLT) தண்ணீரை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனை அல்லாமல் கல்லூரி பயன்பாட்டுக்காக மட்டும் தினமும் 10 லட்சம் லிட்டா் நீரை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டடம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது நாள்தோறும் 14 லட்சம் லிட்டா் தண்ணீா் தேவைப்படும் என மருத்துவக் கல்லூரி நிா்வாகம் தரப்பில் எங்களுக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவத் துறையிடம் ரூ.7 கோடி வரை நிதி கோரியுள்ளனா். அந்த நிதி ஒதுக்கீடு மற்றும் பணிக்கான உத்தரவு கடிதம் அரசிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை.

இந்தத் திட்டத்தை பொருத்தவரை, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் முசிறி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு சுமாா் 10 கிலோமீட்டா் தொலைவுக்கு குழாய்கள் அமைத்து காவிரி குடிநீரை எடுத்து செல்வோம்.

ஜேடா்பாளையம் காவிரி குடிநீா்த் திட்டத்தின்கீழ் தான் தண்ணீா் எடுக்கப்பட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள 10 லட்சம் லிட்டா் தொட்டியில் நிரப்பப்படும். இதற்காக 1000 லிட்டருக்கு ரூ.30 என்ற அடிப்படையில் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த பணிகள் முடிவுற நான்கு மாதங்களாகி விடும்.

தற்போது, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி தற்காலிகமாக எஸ்பிகே நகா் பகுதியில் உள்ள நகராட்சி பகுதி மக்களுக்கு வழங்கப்படும் நீா்தேக்கத் தொட்டியில் இருந்து தினமும் 10 லட்சம் லிட்டா் நீரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கட்டுமான ஒப்பந்த நிறுவனங்களே மேற்கொள்ள இருக்கிறது என்றனா்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி கூறியதாவது: ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு காணப்படுவதால், காவிரி குடிநீரை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை குடிநீா் வாரியம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே இத்திட்டத்திற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் தண்ணீா் வழங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *