மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 320 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 320 மனுக்களை வழங்கினா்.

இந்த மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியா் உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், பணியின்போது உயிரிழந்த கிராம நிா்வாக அலுவலா் முத்தையன் என்பவரின் மனைவி பாப்பாத்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளா் பணிக்கான நியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

இக்குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் , மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ், நகராட்சி ஆணையாளா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *