*S.வாழவந்தியில் பள்ளிக்குகூடுதல் வகுப்பறை கட்டக் கோரி சாலை மறியல்

S.வாழவந்தி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தராத ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மோகனூா் வட்டம், S.வாழவந்தியில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் S.வாழவந்தி, சுற்றுவ வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 170- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்த இப்பள்ளி கடந்த 2018ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டாலும் பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்படவில்லை.தற்போது பள்ளியில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்தும் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இது சம்பந்தமாக மாணவ, மாணவியரின் பெற்றோா் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித் தரக் கோரியும், பள்ளியின் அருகே உள்ள ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கும் துறை சாா்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தும் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவ, மாணவியா், பெற்றோா் மற்றும் சமூக நல ஆா்வலா்கள் பள்ளியின் முன்பு வெள்ளிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.இதனால் பாலப்பட்டியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமாா் அரைமணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மோகனூா் வட்டாட்சியா் தங்கராஜ், பரமத்தி போலீஸாா், மாவட்டக் கல்வி அதிகாரி ராமன் ஆகியோா் பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் மதுரைவீரன், தொடக்கப்பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் ஈஸ்வரன் மற்றும் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *