தமிழகத்தில் பதவியேற்றுஓராண்டு நிறைவுற்று இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக தலைவரும் மாநில முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

2021 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், முதல்வராகப் பதவியேற்றார் ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சா்களும் பதவியேற்றனா். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று தொடங்கி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா். ரகசியக் காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டாா்.

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், உடனடியாக தலைமைச் செயலகம் சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதோடு கரோனா நிவாரணத் தொகை வழங்குவது உள்பட ஐந்து முக்கியதிட்டங்களில் அவா் கையெழுத்திட்டாா்.

  1. தமிழகத்தில் கரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
  2. ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைத்து விற்பனை செய்யப்படும்.
  3. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்.
  4. ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கப்படும்.
  5. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கரோனா சிகிச்சை செலவுகளையும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் என்பது உள்ளிட்ட 5 திட்டங்களுக்குமான கோப்புகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டாா்.

ஆட்சி மாற்றம் மட்டுமல்ல.. காட்சிகளும்

பதவியேற்ற அன்று, தலைமைச் செயலகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தனது ஆளுயர படத்தை உடனடியாக அகற்றச் சொன்னார் ஸ்டாலின். தலைவர்களின் படங்களை வைக்க இவை ஒன்றும் அரசியல் கட்சி அலுவலகங்கள் அல்ல என்றும் கடிந்து கொண்டதாக தகவல்.

திணறிக் கொண்டிருந்த தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே, தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்திருந்தது. தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க, தொற்று பரவலும் சூடுபிடிக்கத் தொடங்கியது. பல இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையால் தமிழகமே தவித்துக் கொண்டிருந்தபோதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழக முதல்வராக பதவியற்றார் ஸ்டாலின்.

பதவியேற்றதுமே, கரோனா பேரிடரை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு நியமிக்கப்பட்டார். மத்திய அரசுக்கு ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தினார். இவையெல்லாம் நடந்தது பதவியேற்ற அதே நாளில்.

கரோனாவை கட்டுப்படுத்த முதல் ஆயுதமாக முதல்வர் ஸ்டாலின், கையிலெடுத்தது பொதுமுடக்கம். மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 2 வாரம் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் அறிவித்தார். அப்போது தமிழகத்தில் பலி 250 ஆகவும் தினசரி பாதிப்பு 27 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.59.30 கோடியை விடுவித்து உத்தரவிட்டார்.

ஒரு பக்கம் ஆக்ஸிஜன் செரிவூட்டிகள், மறுபக்கம் சித்தா போன்ற மாற்று மருத்துவ முறைகள் தீவிரப்படுத்துதல் என கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகள் பல கிளைகளாகப் பிரிந்தன. எனினும், தமிழகம் முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. மருத்துவமனை வாயில்களில் நீண்ட வரிசைகளில் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் நின்றிருந்தன. மேலும் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. மே 15 முதல் கடைகளைத் திறக்கவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. மறுபக்கம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ரெம்டெசிவிர் மருந்து நேரடியாக தனியார் மருத்துவமனைகளுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வந்துவிட்டது தடுப்பூசி..

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மே மாத இறுதி வாரத்தில் தொடங்கியது. சிறப்பு முகாம்களில் கூட்டம் அலைமோதியது.

கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்படாமலும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு சீரடையாமலும் தமிழகம் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த போது மற்றுமொரு பேரிடி விழுந்தது. அதுதான் கருப்பு பூஞ்சை எனும் கொடிய தொற்று. இது கரோனா நோயாளிகளை மேலும் கதிகலங்க வைத்தது.

மே 23.. நிலைமை சீரடையாமல் தளர்வில்லா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. சில நகரங்களில் மட்டும் கரோனா கட்டுக்குள் வராமல் அடம்பிடித்தது. ஜூன் முதல் வாரம் வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட, அதற்குள் கருப்புப் பூஜை பாதிப்பு 400ஐ எட்டியிருந்தது.

முன்னுதாரணமாக மாறினார்

முன்களப் பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா நோயாளிகளைச் சந்திக்க பாதுகாப்புக் கவச உடையை அணிந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். இது அன்றைய நாளில் மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.

பல கட்ட நடவடிக்கைகளின் காரணமாக ஜூன் மாதத்தில் கரோனா பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகம் மீண்டும் இயல்பாக மூச்சுவிடத் தொடங்கியது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா கடந்த செப்டம்பர் மாதம்நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்ய தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு காட்டம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசுக்கு சரியான பதிலடி என இதர மாநிலங்களுடனான பிரச்னைகளிலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சரியான நடவடிக்கைகளை கையாண்டது.

ஏழை, எளிய மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முதல்வரே களம் காண்பது, சென்னை வெள்ளத்தில் தத்தளித்தபோது சாலைகளில் இறங்கி மக்களின் குறைகளைக் கேட்டது, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்தது என மக்களோடு மக்களாக இணைந்து செயல்பட்டார் முதல்வர்.

மக்களைத் தேடி மருத்துவம், விவசாயத்துக்கு இலவச மின்சாரம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அளிக்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி, பல்வேறு காலக்கட்டங்களில் கூடங்குளம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி என திமுக அளித்த வாக்குறுதிகளில் சொன்னதும் சொல்லாத பல நல்ல திட்டங்களும்தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டில் 130க்கும் கூடுதலாக தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, கோயில் நிலங்கள் மீட்பு என பல அதிரடி அறிவிப்புகள் மூலம் திமுக அரசு தனது ஓராண்டு பயணத்தில் பல சாதனைக் கற்களைப் பதித்து வருகிறது.

முதல்வராக மு.க. ஸ்டாலினின் பயணம், கரோனா பேரிடரில் தொடங்கி, பல சவால்களுடனும்நீண்ட சாதனைப் பட்டியல்களுடன் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, இன்னும் பல எதிர்பார்ப்புகளுடன் பார்த்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *