திருப்பூர்: அரசு நிலத்தை விற்பனை செய்ததில் ரூ.50 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு கொடுத்தனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் உள்ள நஞ்சராயன் குளம் 440 ஏக்கரில் பரந்து விரிந்து நல்லாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்பெற்று வருகிறது. இந்த குளம் தற்போது தமிழக அரசால் 17வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குளத்தின் கரையில் சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் உள்ள 8.90 ஏக்கர் நிலத்திற்கு இடையில் குளத்தின் இருகரைகளிலும் இருந்து நீர் செல்வதற்காக நீர்வழி பாதையும் உள்ளது. இதன் அன்றைய மதிப்பு ரூ.50 கோடி. ஆனால் நிலத்தை மதிப்பீடு செய்யும்போது ரூ.1.5 கோடி மட்டுமே என்று மதிப்பீடு செய்து விற்பனை செய்ததில் பெரிய ஊழல் நடந்துள்ளது.

இந்த ஊழலில் அன்று பதவியில் இருந்த மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தனியார் அறக்கட்டளை அறங்காவலர்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த நிலம் 3 புறமும் ஓடை புறம்போக்கு சூழப்பட்டு உள்ளதாலும், குளக்கரையில் உள்ளதாலும் மேற்படி நிலம் ஓடை புறம்போக்கு என வகைப்பாடு செய்ய உகந்த நிலமாகும். எனவே ரூ.50 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.1.5 கோடிக்கு தனியார் பள்ளியை நடத்தி வரும் டிரஸ்டிற்கு விற்பனை செய்ததில் ரூ.50 கோடி ஊழலில் ஈடுபட்ட முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி.உதயகுமார் மற்றும் அதற்கு உடந்தையாக இருநத் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும். அதிகார வரம்பு மீறல் குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். மேற்படி நிலத்தை நீர்நிலை புறம்போக்கு வகைப்பாடு செய்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *