சூலூர்: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இளம்பெண்ணை சூலூர் காவல் நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர் விடிய விடிய சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூலூர் அப்பநாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சவுமியா (35). இவரது முதல் கணவர் சுரேஷ். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையில் முதல்நிலை காவலராக இருந்தார். அவரை விவாகரத்து செய்துவிட்டு கோவை தனியார் மருத்துவமனையில் லேப்-டெக்னீசியனாக வேலை செய்து வந்த சீனிவாசன் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டு திடீரென தலைமறைவானதாக தெரிகிறது. இது தொடர்பாக அப்பநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த அம்சா என்பவர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சவுமியா சூலூரில் உள்ள லாண்டரி கடைக்கு துணி வாங்க வந்துள்ளார். இதனை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அங்கு திரண்டனர். சுதாரித்து கொண்ட சவுமியா காரில் தப்பி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் காரை துரத்திச் சென்று கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பாலசுந்தரம் ரோட்டில் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது அங்கு வந்த ரோந்து போலீசார் அனைவரையும் பந்தய சாலை காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். அங்கு விசாரித்த போலீசார் அந்த பெண்ணை சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அப்போது சவுமியாவிற்கு பாதுகாப்பாக 2 வழக்கறிஞர்களும் வந்து இருந்தனர்.

அங்கு சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையனிடம் வழக்கறிஞர்கள் இருவரும், ‘‘சவுமியாவை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக்கூடாது. எங்களுடன் அனுப்புங்கள். விசாரணைக்காக 28ம் தேதி காலையில் ஆஜர்படுத்துகிறோம்’’ எனக் கூறினர். அதன்பேரில் அவர்களுடன் சவுமியாவைச் செல்ல இன்ஸ்பெக்டர் அனுமதியளித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் காவல் நிலையத்தைவிட்டு சவுமியா வெளியே செல்ல முடியாதபடி காத்திருந்தனர்.

நள்ளிரவில் 3 முறை சவுமியா வெளியே செல்ல முயற்சி செய்தார். இருப்பினும் முடியவில்லை. காலை 4 மணி அளவில் 108க்கு போன் செய்த சவுமியா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், உடல்நிலை சரியில்லை எனவும் கூறி ஆம்புலன்சில் ஏறி வழக்கறிஞர்களுடன் தப்பினார். செய்வதறியாது திகைத்த பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்சைப் பின் தொடர்ந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *