ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் அகதிகள் முகாமை சேர்ந்த விசாரணை கைதிகள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அகதிகள் முகாம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களை விசாரணை கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர். இங்கு, நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்த கெட்டியன்பாண்டி என்கிற ராஜன் (வயது 39), பொள்ளாச்சி அகதிகள் முகாமை சேர்ந்த தர்மகுமார் (35), தீபன் (35) ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கின் விசாரணைக்காக நேற்று மாலை ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி மாலதி விசாரணை நடத்தி மீண்டும் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி ஆஜர்படுத்திட உத்தரவிட்டார்.

தர்ணா போராட்டம்

இதைத்தொடர்ந்து 3 பேரையும் வேனில் ஏற்றி அழைத்து செல்ல போலீசார் முயன்றனர். அப்போது, கெட்டியன்பாண்டி என்கிற ராஜன், தர்மகுமார், தீபன் ஆகியோர் திடீரென கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, கெட்டியன்பாண்டி என்கிற ராஜன் அங்கு நின்றிருந்த மோட்டார் சைக்கிளை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

திருச்சி சிறப்பு முகாமில் எங்கள் பெற்றோர் மற்றும் குழந்தைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். நாங்கள் அனுமதி இல்லாமல் செல்போன் பயன்படுத்தியதாக கூறுகின்றனர். எங்களுக்கு அனைவரிடமும் பேச உரிமை உள்ளது. நாங்கள் முகாமிற்குள் செல்லும்போது எங்களது செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை தெரிவித்து விட்டு தான் செல்கிறோம்.

விசாரணை நடத்த வேண்டும்

இப்படி இருக்க, செல்போன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து விட்டனர். இன்று (அதாவது நேற்று) காலை திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்கள் மீது தடியடி நடத்தி உள்ளனர். நாங்கள் இந்தியாவுக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. ஆனால் எங்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கின்றனர்.

இப்படி செய்வதற்கு நாங்கள் இந்தியாவிற்கு வந்தபோது அகதிகளாக ஏற்றுக்கொள்ளாமல், திருப்பி அனுப்பி இருக்கலாம். தமிழக முதல் -அமைச்சரின் ஆட்சியை நாங்கள் மதிக்கிறோம். எனவே முதல் -அமைச்சர் தலைமையில் குழு அமைத்து, சிறப்பு முகாமில் என்ன நடக்கிறது என்பதை விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு கெட்டியன்பாண்டி என்கிற ராஜன் கூறினார்.

இதையடுத்து 3 பேரையும் போலீஸ் வேனில் ஏற்றி திருச்சி முகாமிற்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *