திருப்பூர் : ஐ.எஸ்., பயங்கரவாதி, மாவோயிஸ்ட் தம்பதி, விதிமீறி தங்கியிருந்த வங்கதேசத்தினர் என, அடுத்தடுத்து நடந்த கைது சம்பவங்களால், ‘டாலர் சிட்டி’ நகரமான திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய, வெளிமாநில தொழிலாளர் விபரம் சேகரித்து, ஆவணப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீனிவாச முல்லாகெவுடு, 23; இவரது மனைவி அஞ்சலி, 20. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், திருப்பூர், நல்லுார் – முதலிபாளையத்தில் வசித்தனர். இரு நாட்களுக்கு முன், தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவில், ஏ.பள்ளிபட்டி போலீசார் உதவியுடன், தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து, சீனிவாச முல்லாகெவுடுவை பிடித்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், வெடி மருந்து சப்ளை செய்ததாகவும் கூறி, அவர் கைது செய்யப்பட்டார். அவரை, மஹாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த தனிப்படை போலீசார் மஹாராஷ்டிராவுக்கு அழைத்துச் சென்றனர்.

‘டாலர் சிட்டி’ நகரமான திருப்பூரில், ஏற்கனவே தொழிலாளர் போர்வையில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தம்பதி, ஐ.எஸ்., பயங்கரவாதி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவ்வப்போது, வங்கதேசத்தினரையும் கைது செய்து வருகின்றனர்.பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் விவரம் சேகரிப்பில், தொடர்ந்து மாநகர போலீசார் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

தற்போது, மாவோயிஸ்ட்களுக்கு வெடி மருந்து சப்ளை செய்து உதவிய வாலிபர், ஐந்து மாதங்களாக திருப்பூரில் பதுங்கியிருந்தது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெளிமாநில தொழிலாளர்களை ஆவணப்படுத்தும் விஷயத்தில், கலெக்டர் தலையிட்டு உடனடியாக பதிவு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்; திருப்பூரின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *