ஈரோடு

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

கருமுட்டை விற்பனை

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை தானம் என்ற பெயரில் கரு முட்டை விற்பனை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி என்ற பெண், சிறுமிக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஜான் என்பவர் என 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உயர்மட்டக்குழு விசாரணை

அதுமட்டுமின்றி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தின் தலைவரும், இணை இயக்குனருமான டாக்டர் அ.விஸ்வநாதன் தலைமையில் 5 பேர் கொண்ட உயர் மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஈரோட்டுக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சோதனை நடத்தி, விசாரணையும் செய்தனர். அப்போது ஈரோடு மட்டுமின்றி, பெருந்துறை, சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் பகுதி ஆஸ்பத்திரிகளிலும் சிறுமியிடம் கருமுட்டை பெற்று விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அமைச்சர் அறிவிப்பு

இதற்கிடையே புரோக்கராக செயல்பட்ட மாலதியை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதுபோல் டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான அதிகாரிகளும் ஜெயிலில் இருக்கும் 4 பேரிடமும் கோர்ட்டு அனுமதியின் பேரில் விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்தி வந்த விசாரணைகள் குறித்தும் உயர்மட்டக்குழு அதிகாரிகள் கேட்டு அறிந்தனர்.

இந்த விசாரணை அறிக்கைகள் அனைத்தும் அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, 16 வயது சிறுமியிடம் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை பெற்றது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த குற்றத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி, பெருந்துறை ராம்பிரசாத் ஆஸ்பத்திரி, சேலம் சுதா ஆஸ்பத்திரி மற்றும் ஓசூர் விஜய் ஆஸ்பத்திரி ஆகிய 4 ஆஸ்பத்திரிகள் மீதான நடவடிக்கை குறித்து அறிவித்தார்.

ஸ்கேன் கருவிகளுக்கு சீல்

அதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ஆர்.பிரேமகுமாரி தலைமையில், குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் என்.என்.ராஜசேகரன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நிர்மலா மற்றும் அதிகாரிகள் ஈரோடு சுதா ஆஸ்பத்திரியில் சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நேற்று மதியம் இந்த குழுவினர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சுதா மகப்பேறு மருத்துவமனைக்குள் நுழைந்தனர். அங்கு செயல்பாட்டில் இருக்கும் ஸ்கேன் கருவிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஸ்கேன் கருவிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த கருவிகளை இயக்க முடியாதபடி சீல் வைத்தனர். மேலும், ஸ்கேன் கருவிகள் வைக்கப்பட்டு இருந்த அறைகளையும் சீல் வைத்தனர். மொத்தம் 5 ஸ்கேன் கருவிகள் மற்றும் அதற்கான அறைகள் சீல் வைக்கப்பட்டன. இந்த பணிகள் மாலைவரை நடந்தது.

இந்த ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை 15 நாட்களில் மாற்று ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே இந்த 15 நாட்கள் காலக்கெடு முடிந்த பிறகு, மீண்டும் அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பெருந்துறை ராம்பிரசாத் ஆஸ்பத்திரிக்கும் செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *