கவர்னர் வருகை

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, கார் மூலம் ஓடாநிலை வந்தார்.

அவருக்கு கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சசிமோகன் ஆகியோர் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். ஈரோடு மாவட்ட ஆயுதப்படை போலீஸ் சார்பில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதை கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்.

தீரன்சின்னமலை சிலைக்கு மரியாதை

பின்னர் தீரன்சின்னமலை மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தீரன்சின்னமலை முழுஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மணிமண்டபத்துக்குள் சென்ற அவர் அங்கு தீரன் சின்னமலை உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பழனி சாதுசுவாமிகள் திருமட மடாதிபதி சாது சண்முக அடிகளார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாராட்டு

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஓடாநிலை அருகே உள்ள கொங்கு சமூக ஆன்மிக கல்வி-கலாச்சாரம் அறக்கட்டளை மற்றும் தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் நடந்த தீரன்சின்மலை 217-வது நினைவேந்தல் நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பழனி சாதுசுவாமிகள் திருமட மடாதிபதி சாது சண்முக அடிகளார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பா.ஜனதா தலைவர் கே.அண்ணாமலை, சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் ஐ.ஏ.ஏ.எஸ். அதிகாரி ராஜா பி.ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

தீரன்சின்னமலை வாரிசுதாரர்கள் மற்றும் ஓடாநிலை பகுதி மக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் அவர் பேசினார். தொடக்கத்தில் சில வாக்கியங்களை அவர் தமிழில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் நினைவு நாளில் பங்கேற்பதில் பெருமையாக உள்ளது.

தமிழில் பேசுவேன்

தமிழ் மிகவும் பழமையான மொழி. மிகவும் அழகான மொழி. தமிழ் மக்களைப்போன்று நானும் தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. விரைவில் நானும் உங்களைப்போன்று சரளமாக தமிழில் பேசுவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய அவர் இறுதியில் தமிழில் வணக்கம் என்று கூறி முடித்தார்.

கலந்துகொண்டோர்

நிகழ்ச்சியை தீரன் சின்னமலையின் வாரிசுதாரர் ஜெ.சின்னமலை கிருஷ்ணகுமார் ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சி.சரஸ்வதி, நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், ஒளிரும் ஈரோடு அமைப்பு நிர்வாகிகள் யு.ஆர்.சி.தேவராஜன், டாக்டர் கே.எம்.அபுல்ஹசன், சி.டி.வெங்கடேஸ்வரன், சாரல் கணேசன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செ.நல்லசாமி, சுபி தளபதி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *