விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார்.

இந்து -முஸ்லீம் -கிறிஸ்டியன் என்ற எந்த மதப் பாகுபாடும் இல்லாமல், செஞ்சி தொகுதியில் அனைத்து மத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டவர் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

இந்நிலையில் அவரிடமிருந்து கற்றுக்கொண்டாரோ என்னவோ அவரது மகனும் செஞ்சி பேரூராட்சி தலைவருமான மொக்தியார் மஸ்தானும், மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி தலைவராக இருப்பவர் மொக்தியார் மஸ்தான். இவர் தமிழக சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தானின் மகன் ஆவார். இஸ்லாமியராக இருந்தாலும் கூட கோவில், தேவாலயம் என எல்லா இடங்களுக்கும் சென்று அனைத்து தரப்பு மக்களையும் அணுசரித்துச் செல்லக் கூடியவர் அமைச்சர் மஸ்தான்.

இதனால் தான் அவரால் கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஒரே பேரூராட்சியில் தொடர்ந்து தலைவராக வெற்றிபெற முடிந்தது. அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் இரண்டாவது முறையாக ஒரே தொகுதியில் வெற்றிபெறும் வாய்ப்பு கிட்டியது. இந்நிலையில் அமைச்சர் மஸ்தானின் மகனும் செஞ்சி பேரூராட்சி தலைவருமான மொக்தியாரும் மத மாச்சரியங்களை கடந்து பொதுவாழ்வில் தன்னை ஒரு பொதுவான மனிதராக காட்டிக்கொள்கிறார்.

இதனை அவரது நடவடிக்கைகளில் இருந்தே அறிய முடியகிறது. செஞ்சி வழுக்கம்பாறை முத்துமாரியம்மன் கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றிய அமைச்சரின் மகன், அவரும் அங்கிருந்து அந்தக் கூழை சாப்பிட்டுவிட்டுத் தான் சென்றிருக்கிறார். இதேபோல் செஞ்சி அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் ஒரு இஸ்லாமியராக இருப்பினும் கூட அவருக்கு கோவில் திருவிழாவில் பரிவட்டம் கட்டி ஊர் மரியாதை கொடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. தமிழகம் ஒரு மத நல்லிணக்க மண் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் தான் உதாரணமாக திகழ்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *